முல்லைத்தீவு மாவட்டத்தில் 166 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாதனை
பாலநாதன் சதீசன்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன் மகேந்திரன் மாருதியன், எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி கிராமத்தில் வசித்து வரும் மாணவன் மகேந்திரன் மாருதியன், வறுமையான கிராமப்புறப் பின்னணியில் இருந்து தனது விடாமுயற்சியின் மூலம் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாணவனின் சாதனையைப் பாராட்டும் வகையில் புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் அறிவொளி புத்தகசாலையின் இயக்குநர் இன்றையதினம் (06) மாணவனின் இல்லத்திற்கு சென்று, மாணவனுக்கு பதக்கம் அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.
தனது எதிர்கால இலட்சியம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாணவன் மகேந்திரன் மாருதியன், “எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறச் சூழலில் இருந்து கல்வியில் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள இம்மாணவனின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான திறமையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சமூகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் பல சிறந்த கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
